×

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் உலாவும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு திருவள்ளூர் உள்பட பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் கால்நடைகளை கட்டிப்போடாமல் விட்டுவிடுவதால் சாலையின் நடுவே நடமாடி வருகின்றனர். இதன்காரணமாக பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துகிடப்பதால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களும் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். சிலநேரம் விபத்தில் அடிபடும் மாடுகள் இறந்து விடுவதால் அதன் உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளை பிடித்துவைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்ற சம்பவம் நடைபெறுகிறது.

திருவள்ளூரில் இருந்து ஆவடி நெடுஞ்சாலையிலும் அதிகளவில் மாடுகள் உலாவருவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கிவிடுகின்றன. திருவள்ளூரில் இருந்து மணவாளநகர் வழியாக பூந்தமல்லி செல்லும் சாலையிலும் திருவள்ளூரில் இருந்து செங்குன்றத்துக்கும் ஊத்துக்கோட்டைக்கும் என்று அனைத்து சாலைகளிலும் கால்நடைகளை கட்டிப்போடாமல் அவிழ்த்துவிட்டுவிடுவதால் விபத்து நடக்கிறது. இதனால் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்பட பலருக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், ‘’கால்நடைகளை உரிமையாளர்களால் கட்டி முறையாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றித் திரிவதால் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக திரியவிடும் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’எனதெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க ஒவ்வொரு வட்டங்களிலும் வட்டாட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்தும் இதுவரை மாடுகளை முறைப்படுத்த உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் உலாவும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Thiruvallur ,Thiruvallur district ,Perumbudur ,Chungwarchatram ,Tiruvallur ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்