- அமலாக்கத் துறை
- நயினார் நாகேந்திரன்
- சென்னை
- நயினார் நாகேந்திரன் ஹோட்டல்
- திருநெல்வேலி
- பாஜக
- லோக் வா தேர்தல்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் இரண்டு வழக்குகளாக தாக்கல் செய்திருந்தார். ஒன்று, தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருவதாகவும், குறிப்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதினால், அவர்களும் விசாரணை நடத்துவார்கள் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தரமோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது எனவும் இருப்பினும் இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மனுவுக்கு ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
The post நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.