×
Saravana Stores

வெயில் கொடுமையால் பெண் தற்கொலை

ஈரோடு: வெயில் கொடுமையால் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலம், பலனா மாவட்டம், பலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ் மாலிக் (35). இவரது மனைவி சபிதா மாலிக் (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஈரோடு வந்து, சூரம்பட்டி, கோவலன் வீதியில் வசித்து வந்தனர். சரோஜ் மாலிக், அப்பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திலும், சபிதா மாலிக் லுங்கி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், தனக்கு வயிற்று வலி அதிகமாகி வருவதாகவும், அதனால், சொந்த ஊருக்கே போய்விடலாம் என்றும் சபிதா மாலிக் தனது கணவரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் சரோஜ் மாலிக் மறுப்பு தெரிவித்ததால் கணவன், மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு 9 மணியளவில் சரோஜ் மாலிக் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. சரோஜ் மாலிக் வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு சபிதா மாலிக், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சபிதா மாலிக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஆதாலியூரை சேர்ந்தவர் முனுசாமி(34). தனியார் பால் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். முனுசாமிக்கு பூஜா(29) என்ற மனைவியும், 8 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 19ம் தேதி தேர்தல் நாள் என்பதால் அன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. முனுசாமி நண்பர்களுடன், அங்குள்ள விளையாட்டு மைதானத்தில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். மதிய நேரம் என்பதால் வெயில் சுட்டெரித்தது. முனுசாமி நாவறட்சியால் அங்கிருந்தவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் அவரை தட்டி எழுப்ப முயற்சித்தும் அவர் எழவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெயில் கொடுமையால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Saroj Malik ,Balaspur, Palana District, Odisha ,Sabita Malik ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்