×

கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே கிராம கூட்டத்தில் தொழிலாளியை நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற முன்னாள் நாட்டாமை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே எண்ணக்குடி கீழத்தெருவில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டு திருவிழாவை நாளை (23ம்தேதி) நடத்துவது தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் நாட்டாமை அன்பழகன் தலைமையில் கிராம கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

நள்ளிரவு 12 மணி வரை கூட்டம் தொடர்ந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரசேகரன்(58) என்பவர், கடந்த ஆண்டு திருவிழாவை சரிவர நடத்தவில்லை? ஏன் என்று முன்னாள் நாட்டாமை விஜயராகவனிடம் (31) கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயராகவன், சந்திரசேகரனை நெஞ்சில் காலால் எட்டி உதைத்தார். இதில் நிலை குலைந்த சந்திரசேகரன் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் சந்திரசேகரனை எழுப்பிய போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Mariyamman Temple ,Ennakudi Keezatheru ,Peralam ,Nannilam Taluk ,Tiruvarur District ,Chitrai festival ,natama ,
× RELATED கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா