சென்னை: ஏழை எளிய மாணவர்கள் தடையின்றி இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 முதல் ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: இலவச கல்வி திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதில் சேர இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாளுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களின் நகல்களை ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். வேறு வகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
The post ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை பல்கலை.யின் இலவச கல்வி திட்டம்: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.