×

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தமிழகம் முழுவதும் வேலைக்காக 54.25 லட்சம் பேர் காத்திருப்பு: 3,27,820 பேர்; இளநிலை, முதுநிலை பட்டதாரிகள்

சென்னை: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 54.25 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இதில் இளநிலை, முதுநிலை படித்தவர்கள் 3,27,820 பேர் ஆவார்கள். தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு என்று தனி மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய வசதியாக, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பதிவு செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில், வேலைவாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஐடி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் கால் பதித்து, சம்பளத்தை பல மடங்கு அள்ளிக் கொடுத்தாலும், அரசு வேலைக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.25 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 54,25,114 ஆக உள்ளது. அவர்களில் 25 லட்சத்து 134 பேர் ஆண்கள், 29,24,695 பேர் பெண்கள்.
பதிவு செய்தவர்களில் 285 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் 10,83,837 பேரும், 19 முதல் 30 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 92 ஆயிரத்து 409 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் 17 லட்சத்து 341 பேரும் உள்ளனர். 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,38,358 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7,079 பேரும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

மொத்தமாக பதிவு செய்துள்ள 1,49,647 மாற்றுத்திறனாளிகளில், 99,680 பேர் ஆண்கள். 49,967 பேர் பெண்கள்.கலை, அறிவியல், வணிகவியல், பட்டதாரி ஆசிரியர்கள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை அறிவியல், சட்டம், இதர சட்ட படிப்பு படித்தவர்கள் என இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 1,44,903 பேர் உள்ளனர். கலை, அறிவியல், வணிகவியல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை அறிவியல், சட்டம், இதர பட்டப்படிப்பு படித்துள்ள முதுகலை பட்டதாரிகள் 1,82,917 பேர் உள்ளனர் என்றும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தமிழகம் முழுவதும் வேலைக்காக 54.25 லட்சம் பேர் காத்திருப்பு: 3,27,820 பேர்; இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...