×

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 3 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளையும் சேர்ப்பதற்கும், பள்ளியின் உட்கட்டமைப்புகளை உயர்த்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் 2013-2014 முதல் இந்தச் சேர்க்கை தொடங்கப்பட்டு குழந்தைகள் படித்து வருகின்றனர். 2022-23ல் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65,946 குழுந்தைகள் உட்பட 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்கள் படித்து வருகின்றனர்2023-24ல் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 883 குழந்தைகள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,LKG ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...