×

தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: பெரிய மீன்கள் இல்லாததால் ஏமாற்றம்

சென்னை: மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில், நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் நேற்று மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். அதே நேரத்தில் மீன் வரத்து குறைந்து காணப்பட்டது.
கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி ஏப்ரல், மே மாதம் மீன்களின் இனப் பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், அவற்றின் வயிற்றில் உள்ள சினை (முட்டை) அழிக்கப்பட்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இந்நிலையில் மீன் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி மீன்பிடி தடைகாலம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வல்லம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர்.

இதனால் சென்னை காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து என்பது நேற்று மிகவும் குறைந்து காணப்பட்டது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் விடுமுறை தினம் என்பதால் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று காலை முதல் அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டது. மேலும் விலையை பொறுத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400க்கும், பெரிய நெத்திலி ரூ.300க்கும், கவளை மீன் ரூ.300க்கும் விற்கப்பட்டது. தடைகாலம் அமலில் உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன்கள் விலை அதிகரிக்க வாய்புள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

* வஞ்­சி­ரம் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை
சிந்­தா­தி­ரிப்­பேட்­டை­ மீன் மார்க்­கெட்­டிற்கு கேரளா, கர்நாடகா உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­க­ளில் இருந்து மீன்­கள் விற்பனைக்காக கொண்­டு­வ­ரப்­பட்டு வழக்கம் போல் விற்­பனை செய்­யப்­பட்டது. இதனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதே நேரத்தில் மீன்விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. பெரிய வகை மீன்­க­ளான வஞ்­சி­ரம் கிலோ ரூ.1200 முதல் ரூ.1500க்­கும், சங்­கரா, வவ்வால் ரூ.800க்கும், பாறை, சீலா, திருக்கை ரூ.500க்கும், சிறிய வவ்­வால் ரூ.600, கொடுவா ரூ.600, சீலா ரூ.300, சங்­கரா ரூ.500, பாறை ரூ.500, இறால், நண்டு, கடமா பெரியது ரூ.300, நவரை, கானாங்கத்தை, நெத்திலி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை சற்று அதிகரித்து இருந்த போதிலும் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.

The post தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: பெரிய மீன்கள் இல்லாததால் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,
× RELATED சென்னை காசிமேட்டில் மீன் வாங்க...