×
Saravana Stores

வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 1,565 சிறப்பு பேருந்துகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை:நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நாளன்று அரசு பொது விடுமுறை அறிவித்தது. தனியார் நிறுவனங்களும் விடுப்பு அளித்ததால் பலரும் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர். சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்தவர்கள் வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

இந்நிலையில் வாக்கு செலுத்த சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சனிக்கிழமை முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் இன்று வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலானோர் நேற்று பயணத்தை தொடங்கினர். அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள் நேற்று பிற்பகல் முதல் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 260 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், சென்னையை தவிர்த்து முக்கிய பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 400 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று தமிழகம் முழுவதும் பயணிக்க 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணித்தனர். மேலும், முன்பதிவு செய்யாதவர்களும் பயணம் செய்யும் வகையில் சென்னைக்கு 1,565 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு பகுதிகளுக்கு 1,895 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 1,565 சிறப்பு பேருந்துகள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது