- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொது சுகாதாரம்
- சென்னை
- பொது சுகாதார துறை
- குட்டநாத், அலப்புழா மாவட்டம், கேரளா
- ஆரோக்கியம்
சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பொது சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை, சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், இறந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் குறித்தான வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் பொது சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவும் உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டு யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் அவரை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கேரளத்தையொட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
The post தமிழகத்தில் பறவை காய்ச்சல் வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.