×

பொய்யான வாக்குறுதி தரும் மோடி உண்மையின் பாதையில் இல்லை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ராய்பூர்: “பொய்யான வாக்குறுதிகளை தரும் பிரதமர் மோடி மதத்தின் உண்மையான பாதையில் செல்லவில்லை” என்று காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். சட்டீஸ்கரின் பலோடில் உள்ள காங்கேர் தொகுதியில் வரும் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரேஷ் தாக்கூரை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, “கடவுளுக்கு பூஜை செய்பவர்கள், கடவுளை வழிபடுபவர்கள் ஒரு அறைக்குள் தனிமையில், அமைதியாக செய்ய வேண்டும். அதை வௌிக்காட்டி கொள்ள கூடாது. ஆனால் நம் நாட்டில் ஒரு தலைவர் பூஜை செய்யும்போது கேமரா இருக்க வேண்டும். அவர் பூஜை செய்வதை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்க்க வேண்டும் என விரும்புகிறார்.

அரசியலில் மதத்தை புகுத்த கூடாது. அது நம் நாட்டின் பாரம்பரியமல்ல. மதம் என்றால் உண்மை, சேவை என்று பொருள். ஆனால் மேடையில் நின்று கொண்டு பொய்யான வாக்குறுதிகளை தரும் மோடி, மதத்தின் உண்மையான பாதையில் செல்லவில்லை என்று அர்த்தம். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு ஒருசில தொழிலதிபர்களுக்காகவே செயல்படுகிறது. தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை ரத்து செய்த மோடி அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறது. மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்று பாஜவினர் சொல்கின்றனர். அவர் உண்மையில் சக்தி வாய்ந்த தலைவர் என்றால் வேலையில்லா திண்டாட்டத்தை ஏன் குறைக்கவில்லை? பணவீக்கத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை?” என்று காட்டமாக பேசினார்.

The post பொய்யான வாக்குறுதி தரும் மோடி உண்மையின் பாதையில் இல்லை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Priyanka Gandhi ,Raipur ,Congress ,general secretary ,Kanger ,Balod, Chhattisgarh ,Dinakaran ,
× RELATED பரபரப்பாக தேர்தல் முடிவுகள்...