×
Saravana Stores

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி தமிழகத்துக்கு கோழி, தீவனங்கள் கொண்டு வர தடை: எல்லையில் தீவிர சோதனை

ஊட்டி: கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி மற்றும் தீவனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதன ஊராட்சிகளில் உள்ள பண்ணைகளில் அதிகளவு வாத்துக்கள் உயிரிழந்தன. இறந்த வாத்துகளை ஆய்வுசெய்தபோது, எச் 5 என் 1 என்ற பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் இங்கிருந்த 17,480 வாத்துகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. தற்போது முட்டாறு மற்றும் அம்பலபுழா வடக்கு ஊராட்சிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து இங்குள்ள 34 உள்ளாட்சிகளில் வரும் ஏப்ரல் 26 வரை வாத்து, கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனைக்கு மாநில அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக – கேரளா எல்லை பகுதிகளான போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு சோனை சாவடிகளில் முகாம் அமைத்து பறவை காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் தென்காசி மாவட்டம் புளியரை, குமரி மாவட்டம் ஆனைகட்டி, வாளையாறு சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பராவமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லைகளான கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, தாளூர், சோலாடி உட்பட 8 சோதனைச்சாவடிகளிலும் உதவி கால்நடை மருத்தவர்கள் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து கோழி, வாத்துக்கள், முட்டை மற்றும் கோழி தீவனங்கள் உட்பட அனைத்தும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்திய நாராயணன் கூறுகையில், ‘‘கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில எல்லையான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழி மற்றும் வாத்து போன்ற பறவைகளுக்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில் உள்ள 8 சோதனைச்சாவடிகளிலும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து கோழி, வாத்துக்கள், வான்கோழி உள்ளிட்ட பறவைகள், முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள், கழிவுகள் ஆகியவற்றை நீலகிரிக்குள் கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை எல்லையில் இருந்தே திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதுவரை மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் பறவை காய்ச்சல் ஏதும் ஏற்படவில்லை’’ என்றார்.

* கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதன ஊராட்சிகளில் உள்ள பண்ணைகளில் அதிகளவு வாத்துக்கள் உயிரிழந்தன.
* இறந்த வாத்துகளை ஆய்வுசெய்தபோது, எச் 5 என் 1 என்ற பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

The post கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி தமிழகத்துக்கு கோழி, தீவனங்கள் கொண்டு வர தடை: எல்லையில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Edathua ,Cheruthana ,Alappuzha district ,Kerala Ban ,Dinakaran ,
× RELATED கழிவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க...