×

சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை: ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: சட்ட விரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவமனைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது.
கடந்த 4ம் தேதி அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, ஓட்டலில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்திய போது, ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சட்டவிரோதமாக அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டது தெரியவந்தது. பணம் பெற்றுக்கொண்டு சிறுநீரக தானத்துக்காக அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள 2 மருத்துவமனைகளில் இதே போன்று சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதில், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியை காவல் துறையினர் முறியடித்துள்ளனர். இதை தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலை சேர்ந்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பிறகு, மருத்துவமனைகளில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவரங்கள்,இதற்காக வரும் வெளிநாட்டினர் பற்றி மாதாந்திர அடிப்படையில் சேகரித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஒன்றிய அரசின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குனர் ஜெனரல் அதுல் கோயல் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சமீப காலமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மருத்துவமனைகளில் நடக்கும் சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெளிநாட்டினர் தொடர்புடைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அந்தந்த மாநிலங்களில் தகுந்த அதிகாரம் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சம்பந்தமாக 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளை மருத்துவமனைகள் மீறினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் விதிகளை மீறி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால், மருத்துவமனையின் லைசென்சை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சட்ட விரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்புகள் தானம் அளிப்பது சம்மந்தமான விவரங்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்கள் இதுபற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் ஒன்றிய அரசிடம் இன்னும் வழங்கவில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக வரும் வெளிநாட்டினர் உள்ளிட்ட நோயாளிகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து சேகரித்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த அறிவுரைகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 3 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
* இவர்களில் 20 பேர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர்.
* உடல் உறுப்புகளை தானமாக தருவோர் எண்ணிக்கை கடந்த 2022ல 16,000ஆக இருந்தது.

The post சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை: ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union govt ,NEW DELHI ,Union government ,Gurugram, Ariana state ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை