×

காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றத்தால் பாதிப்பு; தமிழகத்தில் 113 டிகிரி வெயில் கொளுத்தும்: பொதுமக்களுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை: எல்நினோ காரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மிக வெப்ப சூழ்நிலையால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் மற்றும் வெப்ப அளவுகள் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் அதனால் இந்த ஆண்டு உச்சபட்ச அளவாக 113 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய அலுவலக நிபுணர்களின் அறிக்கையின்படி , பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் இந்த காலநிலை நிகழ்வு உலகின் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக இது சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புவியின் சராசரி வெப்பநிலை அளவை முன்பைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரவிடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தற்போது அந்த அளவை எட்டும் நிலையில் பூமி உள்ளது. இது நிகழ்ந்தால், 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்த புவி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையை பூமி அடையக்கூடும். எல் நினோ 2024ம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு கடல் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது அந்த வெப்பத்திற்கு வளிமண்டலம் பதிலளிக்கும் போது எல் நினோ தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த இயற்கை நிகழ்வுதான் பூமியின் வானிலை அமைப்பில் மிகவும் சக்திவாய்ந்த ஏற்ற இறக்கமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு எல் நினோ உருவானது. அதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டன. அதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவானது, காடுகளின் இழப்பு, பவளப்பாறைகள் வெளுத்தல், காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல் போன்றவற்றுக்கு 2016ல் உருவான எல் நினோ காரணமாக அமைந்தது. பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், கடும் பாதிப்புகள் ஏற்படும். இந்த வெப்பம் மிகுந்த நீரின் நகர்வு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் வெப்பநிலை உயர்வதற்கு வழி வகுக்கும். எனவே, 2024ம் ஆண்டு அல்லது இந்த ஆண்டின் இறுதியில், அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

எல் நினோ காரணமாக தமிழ்நாட்டில் பருவ மழையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வெப்பநிலைதான் அதிகரிக்கும். அதேநேரத்தில் இன்னொரு தரவுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1950ல் இருந்து தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறைகள் எல் நினோ காலத்தில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெயிலைப் பொறுத்தவரை, மே மாதத்தில் இருக்கும் கத்திரி வெயில் என்பது ஜூன் வரை நீடித்துள்ளது. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்கு வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி வெப்ப அலையை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லை.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் எகிறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 11 இடங்களில் மட்டும் 106 டிகிரி வெயில் நிலவியது. மேலும், கடந்த 3 மாதங்களாக சராசரியாக 100 டிகிரி வெயில் தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் நிலவி வருகிறது. எல்நினோ காரணமாக இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வங்கக் கடல் பகுதியிலும் இதன் பாதிப்பு இருக்கும் என்பதால், இந்த ஆண்டு 113 டிகிரி வரை வெயில் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆந்திரா, மகாராஷ்டிரா பகுதிகளில் 113 டிகிரி வரை வெயில் எகிறியதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உச்ச பட்ச அளவாக 113 டிகிரி வரை வெயி்ல் இருக்கும். அதற்கேற்ப வறட்சியும் காணப்படும். பகலில் வெப்ப அளவும் இயல்பைவிட 2-5 டிகிரி செல்சியஸ் வரையும் உயரவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உடலில் ஆசிட் ஊற்றியது போன்ற எரிச்சலை உணர முடியும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயிலின் காரணமாக உடல் சார்ந்த நோய்கள் வரதொடங்கியுள்ளது. இதில் ஒன்றாக ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் நோயால் அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் நாடாளுமன்ற தேர்தலின் போது, ஓட்டு போட வரிசையில் காத்து இருந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரண்டு அரசுப் பணியாளர்கள் இறந்தனர். அவர்கள் வெயில் மற்றும் வெப்ப தாக்கத்தினால் இறந்திருக்கலாம். வெயிலின் இந்த தாக்கத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போகும். இதன்காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஸ்ட்ரோக் ஏற்படும்போது 2% இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பார்ப்பதற்கு ஹார்ட் அட்டாக் போன்றுதான் தெரியும். ஆனால் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைதான் இது. இணை நோயான இதய கோளாறு, உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள் ஆகியோரும், மது அருந்திவிட்டு வெயிலில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

அதிக வெப்பம் காரணமாக தலை சுற்றல் மயக்கம், இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வராமல் இருப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கி்ன்றனர்.

The post காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றத்தால் பாதிப்பு; தமிழகத்தில் 113 டிகிரி வெயில் கொளுத்தும்: பொதுமக்களுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Pacific ,El Niño ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...