×
Saravana Stores

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்: நாளை தேரோட்டம்

மதுரை: சித்திரை திருவிழாவில் மதுரை அரசியாம் மங்கல மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 19ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான ‘திக்விஜயம்’ நேற்று நடந்தது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக, கோயிலுக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.30 லட்சம் செலவில் திருமண மேடை அமைக்கப்பட்டிருநத்து. 10 டன் பூக்கள் மற்றும் பட்டு துணிகளால் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசிக்கும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பந்தலில் 300 டன் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்திற்காக ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதுதவிர முக்கிய பிரமுகர்களுக்கு பேட்ஜ், உபயதாரர்களுக்கான இலவச பாஸ்கள் வழங்கப்பட்டன.

இன்று அதிகாலை மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்கக்கவசத்துடன், சிவப்பு கேரா நிற பட்டு உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார். சுந்தரேஸ்வரர் பெருமாள் வெண்பட்டு, பிரியாவிடை பச்சைப் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். இதையடுத்து மேலக்கோபுர வாசலில் சுந்தரேஸ்வரருக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் மணமேடையில் எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனும் மணக்கோலத்தில் மேடைக்கு வந்தார்.

மணமகளின் இடதுபக்கம் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த பவளக்கனிவாய் பெருமாளும், வலது புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் வீற்றிருந்தனர். காலை 8.15 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் தொடங்கின. மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுந்தரேசுவரராக செந்தில் பட்டரும், மீனாட்சியாக ஹலாஸ் பட்டரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டது.

பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.51 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளம் முழங்க மீனாட்சியம்மனுக்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது விண்ணுலகத்தில் இருந்து தேவர்கள் மலர் தூவி வாழ்த்துவதை போன்று வண்ண மலர்கள் தூவப்பட்டன.

திருக்கல்யாணத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்களும் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர். அதன்பின்பு சுந்தரேஸ்வரர், அம்மனுக்கு தங்கக் கும்பாவில் சந்தனமும், தங்கச் செம்பில் பன்னீரும் கொண்டு வந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தேறியது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சியம்மனும், சுந்தரேசப்பெருமானும் மேடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானையும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, மதுரை கலெக்டர் சங்கீதா, மீனாட்சியம்மன் கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சியம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வருகின்றனர். சித்திரைத்திருவிழாவில் நாளை (22ம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது.

இன்று தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்பாடு
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்.23ல் நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை 6.25 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர்கம்பு ஏந்தி, சகல பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பாக வையாழி ஆன பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். புறப்பட்டது முதல் 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.

ஏப்.22ம் தேதி காலை 6 மணிக்கு மூன்று மாவடி பகுதியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்னமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக்கொண்டு இரவு 11.30 மணிக்கு வைகை ஆற்றிற்கு புறப்படுகிறார். ஏப்.23ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்: நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Meenatshi-Sundhareswarar ,Thirukkalyanam Kolakalam ,Madurai Chitra Festival ,Madurai ,Arashiam ,Mangala ,Meenakshi ,Sundareswarar ,Thirukkalyana ,Madurai Meenakiyamman Temple Chitrai Festival ,Meenatshi ,Sundhareswarar ,
× RELATED இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை...