×

பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி கிடக்குது: பாலிதீன் பைகளால் மண்ணுக்கும், கடலுக்கும் ஆபத்து: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மண்டபம்: பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாலிதீன் பயன்பாட்டை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் தென்கடலோரப் பகுதியான துறைமுக அலுவலகம் அருகே பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதால் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிகடை, இறைச்சி கடை, டீக்கடை, ஓட்டல்கள் என எந்த கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள். 1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்ட வேண்டாம், நச்சுத்தன்மை இல்லாதது, நீர் புகாதது மட்டுமின்றி உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்கலாம்.

உணவு பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் இல்லாமல் பாதுகாக்க முடியும் என கூறினர். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் அதற்கு முக்கிய இடம் உண்டு.இவற்றை மனிதன் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தினார்.

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது கேரி பேக்கை தவிர்த்து, மஞ்சப்பை கொண்டு செல்ல வேண்டும் என்றும், மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து பெரிய கடைகளுக்கு பொதுமக்கள் செல்லும் போது, அவர்களுக்கு அங்கேயே ரூ.10, ரூ.20க்கு பைகள் வழங்கப்பட்டு பொருட்கள் கொடுத்து அனுப்பப்படுகிறது. பெரிய வணிக வளாகங்கள், இதர பெரிய கடைகளில் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது.

ஆனால் தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் சிறிய ஓட்டல்கள், டீ கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் இன்னமும் பாலிதீன் பயன்பாடு பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. மண்டபம் ஒன்றியம் பாம்பன் ஊராட்சி பகுதிகளில் பறந்த கடலோரப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளியூர்களிலிருந்தும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கும் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியை பார்வையிடவும்,பாம்பன் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குந்துகால் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் மணி மண்டபம் ஆகிய பகுதியை பார்வையிட தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

அதன்பின்னர் பாம்பன் சாலை பாலத்தில் நின்று கடலின் அழகையும், ரயில் பாலத்தின் அழகையும் ரசிக்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் தாங்கள் கொண்டுவரும் தின்பண்டங்கள் அடங்கிய பாலிதீன் பைகளை அப்பகுதியிலே விட்டுச் செல்கின்றன.  இதனால் பாம்பன் ஊராட்சி பகுதி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் மற்றும் கடலோரப் பகுதியில் துறைமுக அலுவலகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளத்திற்கு செல்லும் சாலை பகுதிகளிலும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் அதிகமாக தேக்கம் அடைந்துள்ளது.

அதனால் கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மழை நீரை காக்கவும் கால்நடை பிராணிகள் உயிர்களை காக்கவும் பாம்பன் ஊராட்சியில் கடலோரப் பகுதியில் உள்பட அனைத்து பகுதிகளிலும் தேக்கமடைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை அப்புறப்படுத்த பாம்பன் ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாட்டை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களான ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் கடும் பாதிப்பு
கேரி பேக் என்று சொல்லப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் இன்று வாழ்க்கை நடத்துவது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. கடைக்கு செல்லும் போது வேண்டிய பொருட்களை கேரி பேக்கில் வாங்கி தொங்க விட்டு கொண்டு வந்து விடலாம் என்ற நிலைக்கு மக்கள் வந்தது தான் துரதிர்ஷ்டம். பிளாஸ்டிக்கை பயன்படுத்த ஆரம்பித்து 50 ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நிலத்தோடு நின்று விடவில்லை. கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் தாவரங்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு இந்த பைகள் எளிதில் மக்குவதில்லை. பாலிதீன் பைகள் என்பது பாலிதீன் எனும் வேதியியல் பொருளை கொண்டு உருவாக்கப்படுகிறது.

* ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்பாடு அதிகம்
பாலிதீன் பைகள் சூடான உணவு பொருட்களை பார்சலாக கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது டீ கடைகளில் சிறிய பாலிதீன் பையில் தேநீரை நிரப்பி பார்சலாக வழங்குகின்றனர். ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர் மீது உணவுகளை போட்டு பரிமாறுகிறார்கள். அதுவும் சூடான தேநீர், உணவுகளை பிளாஸ்டிக் மீது பயன்படுத்துவதால், அது பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை அறியாமல் இந்த உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் பாலிதீன் பைகளை உணவு பார்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ரசாயன பொருட்கள் பாலிதீன் பைகளில் சூடான உணவுகளை பயன்படுத்துவதால் அந்த பிளாஸ்டிக் நமது கண்ணுக்கு தெரியாத அளவில் உருகி நச்சுத்தன்மை கொண்ட ரசாயன பொருட்களின் மூலம் பலவிதமான நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. இதில் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

The post பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி கிடக்குது: பாலிதீன் பைகளால் மண்ணுக்கும், கடலுக்கும் ஆபத்து: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pamban ,Pampan ,Dinakaran ,
× RELATED வலையில் சிக்கிய மீன்களுக்கு விலையாக...