தமிழகத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தொற்று அல்லாத நோய்களின் (என்.சி.டி.எஸ்) அதிகரிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டு வீடு வீடாக சென்று மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் தொற்றாத நோய்களை கண்டறிதல், சிகிச்சை மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றை மேம்படுத்த உதவியாக இருந்தது. உடல் செயலற்று இருப்பதே தொற்றாத நோய்களுக்கான ஒரு முக்கிய காரணம் பார்க்கப்படுகிறது. உலகளவில் மரணத்திற்கு முக்கிய பங்களிப்பாளர்களில் 4வது இடத்தில் இந்த தொற்றாத நோய்கள் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு (டபள்யு.எச்.ஓ) வெளியிட்டுள்ள தகவல்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குறைந்தபட்சம் 150-300 நிமிடங்கள் மிதமான முதல் தீவிரமான ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75-150 நிமிடம் தீவிரமான ஏரோபிக் உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற் பயிற்சி உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பான சிக்கல்களில் 27 சதவீதமும், இதய நோயுடன் தொடர்புடைய சிக்கல்களில் 30 சதவீதம் குறைக்க உதவியாக இருக்கும்.
ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். 8 கிலோ மீட்டர் என்பது 10 ஆயிரம் அடிகளாகும். தினமும் ஒருவர் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், ஹெல்த் வாக் என்கிற பெயரில், 8 கி.மீ., தூரத்துக்கு சாலைகளை அமைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, தமிழக மக்களின் உடல் நலத்தை மேம்படுத்த இதே போல திட்டம் உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, உள்ளாட்சித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் நவம்பர் 4ம் தேதி அன்று ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் துவங்கப்பட்டது. இதில், 38 வருவாய் மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தின் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு மருத்துவ பரிசோதனையும், குடிநீர் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த கொதிப்பு மற்றும் இதய நோய்களின் தாக்கம் எதிர்காலங்களில் குறைக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக பொதுசுகாதாரத்துறை சமீபத்தில் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்ட 24,310 நபர்களிடம் (டிசம்பர் முதல் மார்ச்) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 19,910 நபர்களிடம் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 13,063 நபர்களுக்கு எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாக காணப்பட்டனர். 5289 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தது, மீதம் உள்ள 1558 நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் புதிதாக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
* பரிசோதனை மேற்கொள்வது மிகவும் முக்கியம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: அனைத்து நோய்களுக்கும் ஒரு தீர்வு என்றால் அது உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது தான். அதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உடற்பயற்சியை ஊக்கப்படுத்த இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் மக்கள் இன்னும் அதிக அளவில் இதை பயன்படுத்த வேண்டும்.
மக்கள் பயன்படுத்த பயன்படுத்த இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். மேலும் இந்த திட்டம் மூலம் பரிசோதனை செய்தவர்களுக்கு சிலருக்கு அப்போது தான் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தெரியவந்துள்ளது. சிலருக்கு குறிப்பிட்ட சிலருக்கு சில கட்டத்திற்கு பிறகு தான் இந்த தொற்று அல்லாத நோய்கள் இருப்பது தெரிய வரும், எனவே மக்கள் அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்ளவது மிகவும் முக்கியம். இந்த ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் விரிவாக்கம் குறித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடர் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.