×
Saravana Stores

திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பூட்டி கிடப்பதால் வெயிலில் அவதி

உடுமலை: திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அணை பூங்கா பூட்டி கிடப்பதால் சாலையில் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலை சுற்றுலா தலம் உள்ளது. இங்கு திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பலரும் குடும்பத்துடன் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். பஞ்சலிங்க அருவியில் குறைவான தண்ணீர் விழுந்தாலும் அதில் குளித்து மகிழ்கின்றனர். திருமூர்த்தி அணை அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்கா எப்போதும் பூட்டியே கிடக்கிறது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பயனின்றி கிடக்கின்றன.

குடும்பத்துடன் வருபவர்கள் உணவு சாப்பிடவோ, இளைப்பாறவோ இடமின்றி சாலையோரத்தில் கடும் வெயிலில் அமர்ந்து உணவருந்தும் நிலை உள்ளது.அணை பகுதியில் பெரிய அளவில் பூங்கா அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான பணி எப்போது துவங்கும் என தெரியவில்லை. அதுவரை, தற்போதுள்ள பூங்காவை திறந்து விட வேண்டும் என சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பூட்டி கிடப்பதால் வெயிலில் அவதி appeared first on Dinakaran.

Tags : Tirumurthi Hill ,Udumalai ,Thirumurthy Hill ,Thirumurthi hill ,Thirumurthy Dam ,Amanalingeswarar Temple ,Panchalinga Waterfall ,
× RELATED தொடர் விடுமுறை எதிரொலி பஞ்சலிங்க...