மதுரை: சித்திரை திருவிழாவின் போது அழகரை வரவேற்கும் பக்தர்களின் அலங்கார பொருட்களான ஆட்டு தோல் பைகள், மூங்கில் தொப்பிகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் இருந்து 21 கிமீ தொலைவில் அழகர்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் பங்கேற்பதற்காக அழகர் கள்ளழகர் கோலத்தில் இன்று கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பாடாகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை அப்பன்திருப்பதி வழியாக மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அழகர்கோயிலில் இருந்து வண்டியூர் வரை நாள் முழுவதும் ஏராளமான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலிப்பார். இதற்கிடையே நாளை மாலை தல்லாகுளம் கள்ளழகரை வரவேற்கும் விதமாக எதிர்சேவை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் எதிர்நோக்கி சென்று வரவேற்பார்கள். அதேபோல் ஆற்றில் அழகர் இறங்கி ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளும் போது நடைபெறும் தீர்த்தவாரியில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இதற்காக பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சுவதற்காக, பாரம்பரிய முறையில் தோல் பைகள் தயாரிக்கப்படும். இந்த தோல்பைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல் அழகர் போல் வேடமிடும் பக்தர்களின் அலங்காரப் பொருட்களான சல்லடம், தலைப்பாகை, அலங்கார மயில் இறக்கைகள் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது. இந்த தோல்பைகளை தயாரித்து விற்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சித்திரைத் திருவிழா தொடங்கியதும் கீழமாசி வீதி பகுதியில் இவர்கள் குவிந்துவிடுகின்றனர். இவர்களிடம் சிறிய மற்றும் பெரிய அளவிலான தோல் பைகள் கிடைக்கின்றன. மேலும் இவர் ஒரு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்கின்றனர். அழகர் மீது தண்ணீர் பீய்ச்சுபவர்கள் பிரசர் பம்ப் மூலம் தண்ணீர் பீய்ச்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாரம்பரிய பித்தளை குழாய்களையே பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதே போல் குன்னத்தூர் சத்திரத்திரத்தில் கருப்பசாமி வேடமிடும் பக்தர்கள் அணியும் கால்சட்டை, திரியாட்டம் ஆடும் பக்தர்கள் பயன்படுத்தும் திரி, சாட்டை உள்ளிட்டவைகளையும் பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறுவதால் அங்கிருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேர்த்திகடன்களை நிறைவேற்ற அழகர், கருப்பசாமி வேடத்திற்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.
கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை மறுநாள் வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் அழகரை வரவேற்பதற்காக நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் தோல் பைகள் மற்றும் மூங்கில் தொப்பிகள் வாங்க ஆர்வமுடன் வந்து செல்வதால் தேர்முட்டி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
The post சித்திரை திருவிழாவில் அழகர் வேடமிடுபவர்களுக்கான ஆடைகள்: ஆட்டு தோல் பைகள், மூங்கில் தொப்பிகள் விற்பனை ஜோரு: மாசி வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.