×

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது: பக்தர்கள் பரவசம்!.

மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றம் முருகன் – தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டும்போது வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருக்கல்யாண கோலத்தில் பவளங்கள் பதித்த கல்யாண கிரீடம், வைர, ரத்தினங்கள் பதித்த மாலை, தங்க ருத்ராட்ச மாலை அணிந்து மணமேடையில் எழுந்தருளியுள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துக் கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சட்டையுடன் மீனாட்சி எழுந்தருளி காட்சியளித்தனர்.

சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திருக்கல்யாணத்தை காண வந்திருந்த பக்தர்கள், தாங்களும் மங்கல நாண் அணிந்துகொண்டனர்.

தொடர்ந்து, அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகர் முழுவதும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலத்துடனும், களைகட்டியும் காணப்படுகிறது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடக்க இருக்கிறது.

The post உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது: பக்தர்கள் பரவசம்!. appeared first on Dinakaran.

Tags : Madurai Meenadashi ,Sundareswarar Thirukkalyana ,Madurai ,Meenadashi Sundareswarar Thirukkalyanam ,Madura ,Chitra Festival ,Meenakshi Amman Temple ,Meenakshi Amman ,Pataphishek ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...