×
Saravana Stores

தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்

 

சிவகாசி, ஏப். 21: தென்னங்கன்றுகள் நடவு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து வேளாண்துறையினர் விளக்கமளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னை வளர்ப்பு அதிகளவு நடந்து வருகிறது. இந்த நிலையில் தென்னங்கன்றுகள் நடவுமுறை குறித்து வேளாண்துறையினர் கூறியிருப்பதாவது: தென்னங்கன்றுகளை நடவு செய்யும்போது 6 முதல் 12 மாத வயதுள்ள கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் கன்றுகளின் கழுத்து பகுதி, நன்கு பருமனாக இருத்தல் வேண்டும்.

அவற்றிலும் ஈட்டியிலை கன்றுகள் மிகவும் நல்லது. பூச்சி, நோய் தாக்காத கன்றுகளை தேர்வு செய்வது அவசியம். இதையடுத்து நிலத்தில் தலா 3 அடி அகலம், ஆழத்தில் குழிகள் தோண்டப்பட வேண்டும். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானது. குழிகளில் 2 அடி உயரத்திற்கு மக்கிய தொழுஉரம், செம்மண் மற்றும் மணலை சமமான விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். பின்னர் குழியின் நடுவே மண் கலவையை எடுத்துவிட்டு வேர்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு தென்னங்கன்றுகளை நட வேண்டும்.

தென்னங்கன்றின் அடிப்பாகமான தேங்காய் மண்ணில் நன்கு புதையும்படி வைத்து காலால் அழுத்திவிட வேண்டும்.இதனை தொடர்ந்து நட்டு வைத்துள்ள கன்றுகளுக்கு, பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழற்கூரை அமைத்துத்தர வேண்டும். தென்னங்கன்றுகளை சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும்.

நடவு செய்யப்பட்ட கன்று காற்றில் சாய்ந்துவிடாமல் இருக்க, பக்கவாட்டில் குச்சி வைத்து கட்டிவிட வேண்டும். வருடந்தோறும் வட்ட பாத்தியை அகலப்படுத்த வேண்டும். வட்ட பாத்திகளில் பயறு வகைகள், சணப்பை, கொழுஞ்சி போன்றவற்றை விதைத்து மடக்கி உழுதல் வேண்டும். இதனால் தென்னங்கன்றுகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்கும். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

The post தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனை