வத்திராயிருப்பு, ஏப். 21: வத்திராயிருப்பு அருகே சாலையோரம் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்றனர். வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் இருந்து அத்திகோயில் செல்லும் வழியில் கான்சாபுரம் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகள் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் 2 விஷப் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடின. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த விஷப்பாம்புகளால் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய அவர்கள் அவற்றை பிடிக்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர்.
ஆனால் அதற்கு முன்பாகவே பாம்புகள் இரண்டும் அருகில் உள்ள விவசாய தோப்பிற்குள் சென்றன. தற்போது கோடை காலம் என்பதால் வத்திராயிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் பகல் நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post வத்திராயிருப்பு அருகே சாலையோரம் விளையாடிய பாம்புகள் appeared first on Dinakaran.