சிவகாசி, ஏப். 21: நாட்டு பசுக்கள் வளர்ப்பது குறித்து வேளாண் துறையினரின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்தில் நாட்டு பசுமாடுகள் முந்தைய காலத்தில் முக்கிய பங்கு பெற்றது. காலப்போக்கில் கிடை அமர்த்துவது, வயலுக்கு குப்பை அடிப்பது. மேலும் பசுந்தாழ் உரங்களான எருக்கு, கொழிஞ்சி இலைகளை இட்டு மடக்கி உழுவது போன்ற செயல்கள் குறைந்து விட்டன. பசுமாட்டில் கிடைக்கும் சாணம், கோமியம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தினால் உரம் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை.
எனவேதான் நாட்டு பசுமாடு நடமாடும் உரக்கடை என அழைக்கப்படுகிறது. அமுதகரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்க நாட்டு பசுக்கள் தேவை. மாட்டு கோமியத்தில் லட்சக்கணக்காண நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன. கிடை அமர்த்தும் போது இவை எளிதில் பயிருக்கு கிடைத்தது. 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் கோமியம், 2 கிலோ பயறு மாவு, 2 கிலோ நாட்டு வெல்லம் மற்றும் கால் கிலோ வயல்மண் சேர்த்து தினசரி காலை மாலை கலக்கி விடவேண்டும்.
இதனால் 10 நாட்களில் ஜீவாமிர்தம் கிடைக்கும். இதனை சாணத்துடன் கலந்து நடவிற்கு முன்பு வயலில் இடும்போது தழைசத்து கிடைக்கிறது. யூரியா இடுவதை குறைக்கலாம். எனவே விவசாயிகள் நாட்டு பசுமாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தி ரசாயன உரங்களை தவிர்க்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல் appeared first on Dinakaran.