×

தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை

தொண்டி, ஏப். 21: தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க நிழல் தேடி அலையும் சூழல் நிலவுகிறது. ஐஸ் வாட்டரை குடிக்க மனிதர்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் வனவிலங்குகள், கால்நடைகளின் நிலையை நினைத்து பார்க்கும் போது கவலையை ஏற்படுத்துகிறது. தொண்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் வெயில் கொளுத்துவதால், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தீர்க்க ஊருக்குள் வரும்போது விபத்தில் சிக்கி பலியாகிறது.

அதனால் வனப்பகுதியில் தண்ணீர் தடாகங்கள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சுகோட்டை உள்ளிட்ட வனப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. மழைக்காலங்களில் கண்மாய் முழுவதும் தண்ணீர் கிடப்பதால் வன விலங்குகள் தங்கள் தண்ணீர் தேவையை அங்கேயே பூர்த்தி செய்து கொள்ளும். வெளியே வர தேவையிருக்காது.

கோடை காலத்தில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றி விடுவதால் மான் உள்ளிட்டவை தங்களின் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு ஊருக்குள் புகுந்து விடுகிறது. அவ்வாறு ஊரை நோக்கி வரும் போது நாய்க்கடித்து இறப்பது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியாவது என அடிக்கடி நடக்கிறது. இதனால் மான் இனம் அழியும் நிலையும் உள்ளது.. அதனால் வனப்பகுதியில் தண்ணீர் தடாகம் அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் சாதிக் பாட்ஷா கூறியது, ‘‘வனவிலங்குகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடதக்கது. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக விலங்குகள் அருகில் உள்ள ஊரை நோக்கி வருவது வழக்கம் .அவ்வாறு வரும் போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தண்ணிர் தடாகங்களை வனப்பகுதியில் ஏற்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

The post தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Dondi ,Tamil Nadu ,
× RELATED பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம்