×
Saravana Stores

தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவுக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடி காரணமா?: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவுக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடியே காரணம் என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இறுதி வாக்கு நிலவரம் 20ம் தேதி பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். இந்நிலையில் திடீரென நள்ளிரவு 12.15 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பெரிய முரண்பாடாக இருந்தது. அதாவது தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்ததைவிட 3 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டுமே தவிர குறையக்கூடாது. கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 72.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற வாக்குப்பதிவு குறைவுக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடியே காரணம் என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, வாக்குப்பதிவு அன்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றுதான் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அப்படி விடுமுறை அறிவிக்காத தனியார் நிறுவனங்கள் பற்றி புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து எச்சரித்து வந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி அனைத்து நிறுவனங்களும் 19ம் தேதி விடுமுறை விடப்பட்டது. ஆனாலும், வாக்குப்பதிவு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்
மிகவும் குறைந்துள்ளது.

இதற்கு முழு காரணம் வாக்குப்பதிவை வெள்ளிக்கிழமை வைத்ததுதான். வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பலரும் அவர்கள் வசிக்கும் இடங்களில் வாக்கு இருந்தும், சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று விட்டனர். மேலும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். இதை முன்கூட்டியே அறிந்து வாக்குப்பதிவு நாளன்று இதுபோன்ற சுற்றுலாத்தலங்கள் அனைத்துக்கும் கட்டாய விடுமுறையை தேர்தல் ஆணையம் அறிவிக்க உத்தரவிட்டிருக்கலாம். இனி வரும் தேர்தல்களையாவது வெள்ளி மற்றும் திங்கட்கிழமை வைக்க கூடாது. இதுபோன்ற தொடர் விடுமுறையை பொதுமக்கள் பலரும் தவறாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அடுத்து, போலி வாக்காளர்களை நீக்குகிறோம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கிறோம் என்று கூறி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் குளறுபடியை ஏற்படுத்தி, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை மொத்தமாக நீக்கி விடுகிறார்கள். இதுபற்றி தேர்தல் அதிகாரிகளிடம் ஒவ்வொரு தேர்தலிலும் புகார் சொல்லி வருகிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையமோ வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தொடர்ந்து பாடும் பாட்டையே பாடி வருகிறது.

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்ப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள எளிய நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைபிடிக்க வேண்டும். வீடு வீடாக வந்து சோதனை போடுவதை நிறுத்திவிட்டு, பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்வது, எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் வசதி செய்து தர வேண்டும். இந்த தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் முன் அறிவிப்பு இல்லாமல் நீக்கி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பெயர் நீக்கும் முன், அதற்கான காரணம் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்று தேர்தல் ஆணையத்தின் தவறான நடவடிக்கைகள் தான் தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவதற்கு காரணம். இனியும் தேர்தல் ஆணையம், 100 சதவீதம் வாக்குப்பதிவுதான் எங்களது குறிக்கோள் என்று தொலைக்காட்சி வழியாக கூறுவதை நிறுத்திவிட்டு, உண்மையில் மக்களை தொந்தரவு செய்யாமல், நடைமுறைகளை எளிமையாக்கி, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

The post தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவுக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடி காரணமா?: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : election commission ,Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்…...