×

முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால் சூரத் தொகுதி காங். வேட்பாளர் மனுவை ஏற்பதில் சிக்கல்: பாஜ மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மனுக்கள் பரிசீலனையின்போது காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் கையெழுத்து இட்டவர்களில் 5 பேரில் இரண்டு பேர் அது தங்களுடைய கையெழுத்து இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல் காங்கிரஸ் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் மனுவை முன்மொழிந்தவரும் அது தன்னுடைய கையெழுத்து இல்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையின் போது நிலேஷ் கும்பானி, மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலா ஆகியோரிடம் விளக்கங்களை கேட்ட தேர்தல் அதிகாரி பதிலளிப்பதற்கு இன்று காலை 11 மணி வரை அவகாசம் கொடுத்துள்ளார்.

நிலேஷ் கும்பானி கூறுகையில்,‘‘என்னுடைய மனுவை முன்மொழிந்த ரமேஷ் போலாரா,ஜெகதீஷ் சவாலியா, துவின் தவேலியா ஆகியோரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என்றார். ஆனால், ஆம் ஆத்மி மாநில தலைவர் கோபால் இட்டாலியா,‘‘கும்பானியின் மனுவில் கையெழுத்திட்டவர்களை பாஜ கட்சியினர் கடத்தி வைத்துள்ளனர். வேட்புமனுவில் போடப்பட்டுள்ள கையெழுத்து தங்களுடையது இல்லை என கூற சொல்லி பாஜ கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது’’ என குற்றம் சாட்டினார்.

 

The post முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால் சூரத் தொகுதி காங். வேட்பாளர் மனுவை ஏற்பதில் சிக்கல்: பாஜ மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,BJP ,Surat ,Congress ,Nilesh Kumbani ,Gujarat ,AAP ,Dinakaran ,
× RELATED அரியானா பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி