- கெஜ்ரிவால்
- ஆம் ஆத்மி
- புது தில்லி
- ஆம் ஆத்மி கட்சி
- தில்லி
- முதல் அமைச்சர்
- தீஹார் சிறை
- டெல்லி அரசு
- ஆம் ஆத்மி
- தின மலர்
புதுடெல்லி: திகார் சிறையில் இன்சுலின் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க மறுப்பதன் மூலம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மெல்ல, மெல்ல மரணத்தை நோக்கி தள்ளப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், தான் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட வேண்டும் மற்றும் குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டார். இதனை சிறை நிர்வாகம் மறுத்து விட்டது. இந்நிலையில், டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல மரணத்தை நோக்கி தள்ளுகின்ற சதி சிறையில் நடக்கிறது. இன்சுலின் தராமல், மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்காமல் கெஜ்ரிவாலின் பல உறுப்புகளை சேதம் விளைவிக்க நினைக்கின்றனர்.
இதனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் மூன்று, நான்கு மாதங்கள் சிறுநீரகம், இதயம் மற்றும் பிற உறுப்புகள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும்’’ என்றார். முன்னதாக, ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால் தினமும் மாம்பழம், இனிப்பு போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால் தரப்பு வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘‘வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட 48 உணவுகளில் 3 முறை மட்டுமே மாம்பழங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் தரப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
The post இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு கெஜ்ரிவால் மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.