புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் முக்கிய புள்ளி என குற்றம் சாட்டப்பட்ட சரத் ரெட்டியிடம் பாஜ ரூ.60 கோடி நன்கொடை பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆம் ஆத்மி எம்பி குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி எம்பியான சஞ்சய் சிங் நேற்று கூறுகையில்,‘‘ டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் என்னை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத்துறை கைது செய்தது. இதில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் சரத் ரெட்டி என குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சரத் ரெட்டி கைது செய்யப்பட்டார். கைதான பிறகு சரத் ரெட்டி பாஜவுக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்தார்.6 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.2023 மே மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாஜவுக்கு ரூ.5 கோடி கொடுத்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் திட்டத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் விவரங்கள் மார்ச் மாதம் வெளியானது. அப்போது தான் சரத் ரெட்டியிடம் பாஜ ரூ.60 கோடி வாங்கியது அம்பலமானது.ஆனால், அதன்பிறகு திடீரென கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது’’ என்றார்.
The post மதுபான கொள்கை வழக்கில் முக்கிய புள்ளியிடம் ரூ.60 கோடி வாங்கிய பாஜ மீது ஈடி நடவடிக்கை எடுக்கவில்லை: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.