×

சொத்தை எழுதி வைக்க மறுத்ததால் ஆத்திரம் பாட்டியை அடித்து கொன்று பேரன் தூக்கிட்டு தற்கொலை

குலசேகரம்: திருவட்டார் அருகே பாட்டியை அடித்து கொன்று பேரன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்துள்ள சாரூர் மேல காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பத்ரோஸ். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி தாசம்மாள் (80). இவர்களின் மகன் புஷ்பராஜ் இறந்துவிட்டதாலும் மருமகள் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்றதாலும், பேரன் அஜித் (23) உடன், தாசம்மாள் வசித்து வந்தார்.

பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த அஜித் தினமும், குடித்து விட்டு சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தாசம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையிலும், வழக்கம் போல் தனது நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு வந்து அஜித் தாசம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலையில் தாசம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு வீட்டின் முன்பக்க அறையில் தாசம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். வீட்டின் மற்றொரு அறையில் அஜித் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அங்கு வந்த திருவட்டார் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜித் குடிபோதையில் நள்ளிரவில் வந்து தாசம்மாளிடம் தகராறு செய்து அவரை தாக்கி வேகமாக தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தாசம்மாள் இறந்துள்ளார். பாட்டி கீழே விழுந்து இறந்ததும் பயந்து போன அஜித், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சொத்தை எழுதி வைக்க மறுத்ததால் ஆத்திரம் பாட்டியை அடித்து கொன்று பேரன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Rage ,Kulasekaram ,Thiruvatar ,Sarur Upper Wilderness Area ,Kumari District Thiruvattara ,Dasammal ,
× RELATED திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்...