×

நேற்று முன்தினம் இரவு 59.96%, நேற்றிரவு 66.88% தூத்துக்குடி தொகுதியில் திடீரென உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம்: அடுத்தடுத்து மாறிய புள்ளி விவரம், கணக்கீட்டில் கடும் குழப்பம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் பல்வேறு குழப்பங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரிக்கு நேற்று மதியம் வரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அதிகாரிகள் வாக்குப்பதிவு விவரங்களை சரிபார்த்து மாலையில்தான் பதிவான வாக்குகள் விவரத்தை வெளியிட்டனர்.

அதன்படி, 4 லட்சத்து 72 ஆயிரத்து 56 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 3 ஆயிரத்து 325 பெண் வாக்காளர்களும், 87 மூன்றாம் பாலினத்தினர் என 9 லட்சத்து 75 ஆயிரத்து 468 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 66.88 சதவீதம் ஆகும். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு: விளாத்திகுளம் தொகுதியில் 73,378 ஆண்கள், 79557 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,52,942 வாக்குகள் பதிவானது. இதன் சராசரி 72.63 சதவீதம் ஆகும்.

தூத்துக்குடி தொகுதியில் 88,074 ஆண்கள், 89,892 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,77,994 வாக்குகள் பதிவானது. சராசரி 63.11 சதவீதம். திருச்செந்தூர் தொகுதியில் 77,527 ஆண்கள், 85,243 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,62,791 வாக்குகள் பதிவானது. சராசரி 67.37 சதவீதம். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 73,556 ஆண்கள், 78,593 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,52,151 வாக்குகள் பதிவானது. சராசரி 67.92 சதவீதம்.

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 81,282 ஆண்கள், 84,845 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,66,146 வாக்குகள் பதிவானது. சராசரி 67.72 சதவீதம். கோவில்பட்டி தொகுதியில் 7,8239 ஆண்கள், 8,5195 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,63,444 வாக்குகள் பதிவானது. சராசரி 64.13 சதவீதம். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி தொகுதியில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது உத்தேச வாக்குப்பதிவு விவரம் என்ற போதிலும், நேற்று இரவு 7 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து பட்டியல் வெளியிட்டது. இதில் தூத்துக்குடி தொகுதியில் 59.96 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்பட்டிருந்தது. இதன்படி தூத்துக்குடி தொகுதியில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு என்றும், தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவில் 3வது இடம் என்றும் தெரியவந்தது.

ஆனால் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் வெளியிட்ட பட்டியலில் தூத்துக்குடி தொகுதியில் 66.88 சதவீதம் வாக்குகள் பதிவானது தெரிய வந்தது. இவ்வாறு அடுத்தடுத்து மாறிய புள்ளி விவரங்களால் தூத்துக்குடி தொகுதி வாக்குப்பதிவில் கடும் குழப்பம் நிலவியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 72% சதவீதம் என்று அறிவிக்கப்பட்டு நேற்று காலை 69.94 சதவீதம் என்று மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தூத்துக்குடியில் திடீரென 7 சதவீத வாக்குகள் உயர்ந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* விளாத்திகுளத்தில் அதிகம் தூத்துக்குடியில் குறைவு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 72.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சமாக 63.11 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

* கடந்த தேர்தலைவிட 2.55 % குறைவு
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடியில் மொத்தம் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால், இம்முறை வாக்குப்பதிவில் 66.88 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த முறையைவிட 2.55 சதவீதம் குறைவாகும்.

The post நேற்று முன்தினம் இரவு 59.96%, நேற்றிரவு 66.88% தூத்துக்குடி தொகுதியில் திடீரென உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம்: அடுத்தடுத்து மாறிய புள்ளி விவரம், கணக்கீட்டில் கடும் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Lok Sabha ,Lok Sabha ,VAUSI Government Engineering College ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும்...