×
Saravana Stores

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம், பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்

மதுரை: சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் மதுரையில் குவிந்தனர். நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

மீனாட்சியம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பேற்கும்விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சியம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்விஜயம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.

இதற்காக, கோயிலுக்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.30 லட்சம் செலவில் சுமார் 10 டன் எடையுள்ள பல வண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட் பூக்கள், கொடைக்கானலிருந்து கார்னேசன், ஜெர்புரா, கோல்டன்ராடு, ஆஸ்கரஸ் போன்ற பூக்களால் மேடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வண்ண பட்டுத் துணிகளாலும் மேடை மெருகூட்டப்பட்டுள்ளது.

பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. இங்கு வெப்பத்தை போக்க ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணக் காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக சித்திரை வீதிகள் உட்பட 20 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குவிந்துள்ளனர்.

திருக்கல்யாணத்தை நேரில் காண்பதற்காக ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ரூ.500 டிக்கெட் வாங்கியவர்கள் மேலக்கோபுர வாசல் வழியாகவும், ரூ.200 டிக்கெட் வாங்கியவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.  இதுதவிர, முன்னுரிமை அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தெற்கு கோபுர வாசல் வழியாக இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணத்தை காண, தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று இரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.  திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 30 இடங்களில் உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம், பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman ,Madurai Chitrai Festival ,Madurai ,Thirukalyanam ,Meenakshi ,Sundareswarar ,Chitrai festival ,Masi ,Madurai Meenakshi Amman temple painting festival ,Meenakshi Amman Thirukalyanam ,Madurai painting festival ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!