×

தமிழ்நாட்டில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வும்… தேர்தல் ஆணையத்தின் தோல்வியும்…

* செத்து போனவங்களுக்கு ஓட்டு இருக்கு… உயிருடன் இருக்குறவங்களுக்கு ஓட்டு இல்ல…

இந்திய திருநாட்டின் 18வது நாடாளுமன்ற அவைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சற்றே குறைந்து 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான தேதி அறிவித்ததிலிருந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ராட்சத பலூன் பறக்க விடுவது,

மாரத்தான் ஓட்டம், கோலங்கள் வரைவது, வாக்காளர் வீடுகளுக்கு சென்று பத்திரிக்கை தாம்பூலம் வைத்து அழைப்பு விடுப்பது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டன. 100% வாக்களிக்க வேண்டும் என படித்தவர்கள் மத்தியிலேயே விளம்பரத்துக்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள், ஏன் கிராம மக்களிடம் அந்த விழிப்புணர்வு பிரசாரத்தை கொண்டு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் உத்தேசமாக எந்த வருடத்தில், எந்த மாதத்தில் நடைபெறும் என்று தெரிகின்ற நிலையில் அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரிப்பார்க்க வேண்டும். ஆனால் அதிகாரிகளோ வாக்காளர் பட்டியல் இருக்கிறது, வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கடமைக்காக அறிவிக்கின்றனர். வாக்களிக்கவே தயங்குகின்ற வாக்காளர்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

மேலும் பலரும் வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கிறார்கள். தேர்தல் நாளில் வாக்களிப்பதற்காக மட்டுமே சொந்த ஊர்களுக்கு வரும் இவர்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிந்துகொள்வது சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் பல ஆண்டுகளாக ஒரு முகவரியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிலருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. சிலருக்கு இல்லை. ஒரே குடும்பத்தில் உள்ளவர்களில் சிலரது பெயர்கள் எந்த அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீக்கினார்கள் என்று இதுவரை முறையாக விளக்கம் அளிக்கவில்லை.

முகவரியை மாற்றினால் வாக்களர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சோதிப்பது இயல்பு. ஆனால் அதே முகவரியில் இருந்தும் பெயர் நீக்கப்பட்டிருப்பது எப்படி என்பது தெரியவில்லை. இதற்கு வாக்காளர்கள்தான் சோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புது விளக்கத்தை கொடுக்கிறது. ஆனால் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்றவர்களின் பெயர்கள் பல முகவரியிலேயே அப்படி இருக்கிறது. அப்படியென்றால் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று சோதித்து பெயரை நீக்கினார்களாக அல்லது கண்ணை மூடி கொண்டு பெயர்களை நீக்கினார்களாக என்று தெரியவில்லை.

குறிப்பாக ஒரு வாக்குச்சாவடியை எடுத்து கொண்டால் 3ல் ஒரு பங்கு வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டவர்களே உள்ளனர். இதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவர்கள், நீண்டகாலமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் பெயர்கள்கூட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள வாக்காளர்கள் அடையாள அட்டையின் எண்ணில் வடவெளிமாநிலத்தில் ஓட்டு உள்ளதாக வாக்காளர்கள் பட்டியலில் உள்ளது.

ஒரு வாக்குச்சாவடிக்கு 5லிருந்து 10 வாக்காளர்கள் பெயர்கள் வரை விடுபட்டிருந்ததால் வாக்களிக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகளாலும், சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பாலும் வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்து உள்ளது. பாஜ சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினர்.

இதுபோன்ற குறைகளை களையாமல் விளம்பரத்திற்காக விழிப்புணர்வு என்ற பெயரில் நகரப் பகுதிகளில் பெயருக்கு நிகழ்ச்சிகள் நடத்தாமல், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை போக்காமல் செயல்பட்டால் வாக்கு சதவீதத்தை உயர்த்த முடியாது என்பதை தேர்தல் ஆணையம் முன்கூட்டியே உணர வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற கள நிலவரங்களிலும் கவனம் செலுத்தி தீர்வு கண்டு தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post தமிழ்நாட்டில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வும்… தேர்தல் ஆணையத்தின் தோல்வியும்… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,18th Parliament of ,India ,2019 ,Tamil Nadu Parliamentary Election ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...