×

விண்ணை முட்டிய ஓம் நமச்சிவாய கோஷம் தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி.1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடித்தார். பழம்பெரும் புகழ்பெற்ற கோயிலில், கடந்த 6ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (20ம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 5 மணிக்கு பெரிய கோயிலிலிருந்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16.5 அடி உயரம், 13 அடி அகலம், 40 டன் எடை கொண்ட 3 அடுக்குகள் கொண்ட தேரில் தியாகராஜர்கமலாம்பாள் மட்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதைதொடர்ந்து காலை 7 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. கலெக்டர் தீபக் ஜேக்கப், எஸ்.பி.ஆஷிஷ் ராவத், மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதியில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி புறப்பட்டது. பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோஷத்துடன், தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்னர் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் சப்பரங்களும் வந்தது. அப்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், குச்சிப்புடி, தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர்.

தேர் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜவீதியில் 4 இடங்களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்கு ராஜவீதியில் 3 இடங்கள் என 14 இடங்களில் தேர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பக்தர்கள் மாலை, தேங்காய், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அளித்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் மின் தடை செய்யப்பட்டிருந்தது. பிற்பகலில் தேர் நிலை மண்டபத்தை வந்தடைந்தது. விழாவின் கடைசி நாளான 23ம் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலை வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

The post விண்ணை முட்டிய ஓம் நமச்சிவாய கோஷம் தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chitrai Therotam Kolagalam ,Thanjavur Big Temple ,Om Namachivaya Gosham ,Thanjavur ,Chitrai festival ,Thanjavur Periya Koil ,Om ,Tanjore Big Temple ,Vinnai Muttiya ,Chitra Chariot Kolakalam ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...