×

வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல அனுமதி

* தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும்படை வாபஸ்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும் படை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி, இனி பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. பொதுமக்கள், வியாபாரிகள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 18ம் தேதி வரை பறக்கும் படையினரால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற சுமார் ரூ.175 கோடி பணம், ரூ.150 கோடிக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நகைகள், பரிசு பொருட்கள், மதுபானம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டாலும், மற்ற மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்.

ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம், நகைகள் எடுத்துச் செல்லக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி இருந்தார். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் எல்லை பகுதியான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பறக்கும் படை சோதனை ஜூன் 4ம் தேதி வரை தொடரும்.

இந்த பகுதியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தமிழகத்தில் மற்ற பகுதியில் (உள்பகுதிகளில்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு குழு வாபஸ் பெறப்படும். இதுகுறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது இன்று (நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றார். மேலும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் மாலை 3 மணிக்கு மேல் அதிகம் பேர் வாக்குப்போட்டுள்ளனர். 6 மணிக்கு மேல் கூட வரிசையில் நின்று டோக்கன் பெற்று வாக்களித்தனர் என்றார்.

The post வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...