×

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிர்ச்சி தகவல் வெளியானதால் பரபரப்பு

* அதிகபட்சமாக மத்திய சென்னையில் 6.22 லட்சம் பேர், குறைந்தபட்சம் தர்மபுரியில் 2.82 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை. அதிகபட்சமாக மத்திய சென்னையில் மட்டும் 6.22 லட்சம் பேர் ஓட்டு போட வரவில்லை. குறைந்தபட்சமாக தர்மபுரியில் 2.82 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். 30.54 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அதாவது 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை. இதில் வடசென்னை தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், வெறும் 60.13 சதவீதம் பேர் தான் வாக்களித்துள்ளனர். அதாவது. 8 லட்சத்து 99 ஆயிரத்து 679 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்க வரவில்லை.

தென்சென்னை தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 54.27 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை. மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 53.91 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அதாவது, 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை. திருவள்ளூர் தொகுதியில் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14,24,940 பேர் (68.31 சதவீதம்) மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 61 ஆயிரத்து 50 பேர் வாக்களிக்கவில்லை. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 பேர் உள்ளனர். இதில் 14 லட்சத்து 34,274 பேர்(60.21 சதவீதம்) பேர் மட்டுமே தங்களுடைய வாக்கை பதிவு செய்துள்ளனர்.

9 லட்சத்து 47 ஆயிரத்து 845 பேர் வாக்களிக்கவில்லை. காஞ்சிபுரம் தொகுதியில் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12 லட்சத்து 51 ஆயிரத்து 314 பேர்(71.55 சதவீதம்) பேர் வாக்களித்துள்ளனர். 4 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேர் வாக்களிக்கவில்லை. தர்மபுரி மக்களவை தொகுதியில் தான் தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்குகள்(81.48 சதவீதம்) பதிவாகியுள்ளது. இந்த தொகுதியில் 15 லட்சத்து 24 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12 லட்சத்து 42 ஆயிரத்து 485 பேர் வாக்களித்துள்ளனர். 2 லட்சத்து 82 ஆயிரத்து 411 பேர் மட்டுமே வாக்களிக்கவில்லை.

மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மறுநாள் சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்று வந்தது. தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற அன்று மாநிலம் முழுவதும் வெயில் அடித்து விளாசியது. கடும் வெயில் வாட்டி எடுத்ததால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும் காரணம் கூறப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிர்ச்சி தகவல் வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madhya Chennai ,Dharmapuri Chennai ,Central Chennai ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...