×

தமிழ்நாடு முழுவதும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. கடந்த 17ம் தேதி பிரசாரம் ஓய்ந்தது.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில்தான் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின. வெயில் காரணமாக பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதேநேரத்தில், பெரியவர்கள் பலரும், சிகிச்சை பெற்று வரும் பலரும் வாகனங்களில் வந்து வாக்கு பதிவு செய்தனர். ஆனால் இளைஞர்கள், நடுத்தர வயதுடைய பலரும் வீட்டிலேயே இருந்து விட்டனர்.

தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வந்ததால் பலரும் சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓட்டு சதவீதம் பெருமளவில் குறைந்து விட்டது. ஆனாலும் மாலை 6 மணிக்கு முன்னதாக வந்த பலருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்கள் வரிசையில் நின்று இரவு வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதில் வடசென்னைக்கு உட்பட்ட 6 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மெரினா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய சென்னைக்கு உட்பட்ட இயந்திரங்கள் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. தென் சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டவை குரோம்பேட்டை எம்ஐஇடி கல்லூரியிலும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை அண்ணா உறுப்பு கல்லூரி (பொன்னேரிகரை )காஞ்சிபுரத்திலும், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்டவை, பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 39 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் அதாவது இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் படையினரும், 2வது அடுக்கில் தமிழக சிறப்பு காவல்படை போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3வது அடுக்கில் ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

4வது அடுக்கில் அதாவது வாக்குப்பதிவு மையத்தின் நுழைவாயிலில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத் தவிர ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கவனிக்கலாம்.
அதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் கண்காணிக்கலாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரை தவிர மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

வேட்பாளர்களின் முகவர்கள் நுழைவாயிலுக்கு வெளியே நிற்கலாம். அவர்கள் 24 மணி நேரமும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
இதற்கு 44 நாட்கள் உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளும் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் சென்று பாதுகாப்பு பணிகளை கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* தமிழகம், புதுவையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் அனைத்து மையங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

* சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கவனிக்கலாம். அதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் கண்காணிக்கலாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரை தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை.

The post தமிழ்நாடு முழுவதும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...