- குன்ரதூர்
- திருநாகேஸ்வரர் கோயில்
- வேதகிரி வேதகிரீஸ்வரர் கோயில்
- சென்னை
- காமாட்சியம்மன் சமீதா திருநாகேஸ்வரர் கோயில்
- Raku
- சித்திரை பிரமோரசவ விழா
- இக்கோயில்
- குஞ்சரத்தூர் திருநாகேஸ்வரர் கோயில்
சென்னை: குன்றத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க காமாட்சியம்மன் சமேத திருநாகேஸ்வரர் கோயில் நவக்கிரக பரிகார தலங்களில் ராகு தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருநாகேஸ்வரர் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் 7வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக, காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.
காலை 9.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காமாட்சியம்மன் சமேதராக உற்சவர் திருநாகேஸ்வர சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நான்கு மாடவீதிகள் வழியாக தேர் வீதியுலா வந்து மதியம் 2 மணியளவில் நிலையை அடைந்தது.
அண்மையில் இத்தேரின் 4 சக்கரங்களும் நன்கொடையாளர்கள் மூலம் இரும்பு சக்கரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தேரை இழுப்பதற்கு எளிதாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி வேதகிரீஸ்வரர் மலைமீது கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் உற்சவமான 63 நாயன்மார்கள் உற்சவம் கடந்த 16ம் தேதி நடந்தது. விழாவின் முக்கிய அம்சமான பஞ்சரத பெரிய தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக துவங்கியது. பெரிய தேர் உற்சவத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஓம் நமசிவாய கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பெரிய தேரின் பின்னால் விநாயகர், வேதகிரீஸ்வர், திரிபுரசுந்தரியம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 மாடவீதிகளிலும் வலம் வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இந்த தேர் உற்சவத்தை காண திருக்கழுக்குன்றம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். வழிநெடுகிலும் அன்னதானம், குளிர்பானங்கள், நீர்மோர் வழங்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் புவியரசு, மேலாளர் விஜயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
The post பிரசித்தி பெற்ற குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.