×

சிங்கப்பூரில் இருந்து வந்து புதுச்சேரியில் முதல் வாக்கை பதிவு செய்த இளம்பெண்

பாகூர் : சிங்கப்பூரில் இருந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்து புதுச்சேரி வந்து, தனது முதல் வாக்கை இளம்பெண் பதிவு செய்தார். புதுச்சேரி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நேற்று நடந்தது. காலை முதலே வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். சிங்கப்பூரில் வசிக்கும் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தை சேர்ந்த இந்திய குடியுரிமை பெற்ற இளம் வாக்காளர் புவியரசி (18), தாய் மாலதியுடன் வந்து, கிருமாம்பாக்கம் வாக்குச்சாவடியில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

இதற்காக அவர், ரூ.50 ஆயிரம் செலவு செய்து சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து கார் மூலமாக கிருமாம்பாக்கம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார். இதுபற்றி புவியரசி கூறும்போது, நான் சிங்கப்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக காத்திருந்தேன். எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்ததால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது. எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு, அங்கேயே எனது முதல் வாக்கை செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

The post சிங்கப்பூரில் இருந்து வந்து புதுச்சேரியில் முதல் வாக்கை பதிவு செய்த இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Puducherry ,Lok Sabha elections ,Puducherry, Tamil Nadu ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு