×

தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய கடமை ஒப்பற்ற ஜனநாயகத் திருவிழாவில் நாங்க எப்போதும் சூப்பர் ஸ்டார்ஸ்

*மீண்டும் நிரூபித்த முன்னோடிகள்

சேலம் : நாடாளுமன்றத் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதில் நாங்கள் தான் எப்போதும் சூப்பர் ஸ்டார்ஸ் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் மூத்த வாக்காளர்கள்.
மன்னராட்சி மறைந்த பிறகு மக்களாட்சியை மாண்புடன் தாங்கி நிற்கும் ஒரு அரிய நிகழ்வே தேர்தல். நம்மை யார் ஆள வேண்டும்? அவர்கள் எப்படி ஆள வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வதற்கான உரிமையின் அடித்தளம் தான் தேர்தல். இந்த வகையில், இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில், 100சதவீதம் வாக்களிப்பு என்பதே தேர்தல் ஆணையம் தொடர்ந்து நிர்ணயிக்கும் இலக்காக உள்ளது. இதற்காக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. சமுதாய மேம்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களும், பிரபலங்களும் இணைந்து தேர்தல் ஆணையத்துடன் கை கோர்த்து பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.

ஆனாலும் 100சதவீதம் வாக்குப்பதிவு என்பது இன்று வரை எட்டித்தொட முடியாத ஒன்றாகவே உள்ளது. படித்தவர்களும், இளைஞர்களும் அதிகளவில் வாக்களிக்க முன்வருவதில்லை என்பதும் சமீபகாலங்களில் வேதனைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. இப்படி பல்வேறு ஒப்பீடுகள் இருந்தாலும், நமது முன்னோடிகளான முதியவர்கள், தள்ளாத வயதிலும் கம்பீரமாக வாக்களித்து, தங்களை ஜனநாயக கடமையாற்றுவதில் நிகரற்றவர்கள் என்று நிரூபித்து வருகின்றனர்.

நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் இதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.தமிழ்நாடு-புதுச்சேரியில் நேற்று நடந்த நடாளுமன்றத் ேதர்தலில், நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் பெருத்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள், புன்னகை சிந்தியவாறு வாக்களித்து சென்றனர். உடல் நலம் குன்றிய நிலையிலும், உறவினர்கள் துணையுடன் வந்து அவர்கள் வாக்களித்தனர். இதற்கிடையில், சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மூதாட்டியும், முதியவரும் உடல்நல பாதிப்பால் திடீரென உயிரிழந்த துயரமும் நடந்தது. ஆனாலும், மாவட்டம் முழுவதும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற நமது முன்னோடிகளின் கடமை உணர்வில் எந்த தொய்வும் இல்லை.

இது குறித்து இடைப்பாடி வெள்ளரிவெள்ளி அரசு பள்ளி வாக்கு மையத்திற்கு வாக்களிக்க வந்த 85வயது மூதாட்டி சின்னத்தாயி கூறுகையில்,‘‘எனக்கு ஓட்டுப்போட வாய்ப்பு கிடைச்ச நாளில் இருந்து, இதுவரைக்கும் தவறாமல் ஓட்டு போடுகிறேன். கணவர் உயிருடன் இருந்தவரையில் அவருடன் வந்து மகிழ்ச்சியாக ஓட்டுபோடுவோம். அதற்கு பிறகு பிள்ளைகள், பேரன்களோடு வந்து ஓட்டு போட்டேன். இப்போது உடல் நலம் சரியில்லை. இருந்தாலும் ஓட்டுப்போடாமல் இருந்தால் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு வரும். இதனால் பேரன் துணையுடன் வந்து ஓட்டு போட்டேன். இயற்கை வாய்ப்பளிக்கும் வரை, எல்லா தேர்தல்களிலும் ஓட்டுப்போடுவேன்,’’ என்றார்.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் வீடுகளிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான முதியவர்கள் அதில் பங்கேற்றவில்லை. சிரமங்கள் இருந்தாலும் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து தான், தங்களது வாக்கை விரும்பும் வேட்பாளருக்கு செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படி தனித்தும், உறவினர்கள் துணையுடனும் வந்து வாக்களித்து சென்றனர். நேற்றைய தேர்தல் களத்தில் ஆர்வத்துடன் திரண்ட இளைய தலைமுறையை விட, அமைதியாக வந்து வாக்களித்த முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஒப்பற்ற ஜனநாயகத் திருவிழாவில் நாங்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்ஸ்’ என்பதை இப்ேபாதும் நிரூபித்துள்ளனர் நமது முன்னோடிகள்,’’ என்றனர்.

 

The post தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய கடமை ஒப்பற்ற ஜனநாயகத் திருவிழாவில் நாங்க எப்போதும் சூப்பர் ஸ்டார்ஸ் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...