×

நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சி

*இளம் வாக்காளர்கள் பெருமிதம்

சேலம் : நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக, சேலத்தில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. முதல் முறையாக வாக்களிக்க இளம் வாக்காளர்கள், ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

மேலும், வாக்குச்சாவடிகளுக்கு முன்பு நின்று, தாங்கள் வாக்களித்ததற்கு அடையாளமாக, கை விரல் மையுடன் செல்பி எடுத்து தங்களது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியை சேர்ந்த இளம் வாக்காளர்கள் பாலு ஆதித்யன், அவரது சகோதரி தீக்ஷிதா (19) ஆகியோர், தங்களது குடும்பத்தினருடன் வந்து, சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சீரங்கபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘முதல் முறையாக வாக்களித்தது பெருமையாக உள்ளது. வாக்காளர் அட்டை கிடைத்ததில் இருந்து, தேர்தலில் வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்தோம். தேர்தல் நாளான இன்று, குடும்பத்தினருடன் ஒன்றாக வந்து ஜனநாயக கடமை ஆற்றியது பெருமையாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் பங்களிக்கும் வகையில், எங்களது முதல் வாக்கினை செலுத்தியதை பெருமையாக கருதுகிறோம்,’’ என்றனர்.

இதேபோல், சேலம் 4 ரோடு பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவி மிருதுவர்ஷினி (20) முதல்முறையாக வாக்களித்த பின்னர் கூறுகையில், ‘‘இந்திய ஜனநாயகத்தில் வாக்களிப்பது அனைவரது கடமை. அதன்படி இன்று எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தது புது விதமான அனுபவமாக இருந்தது. இளைஞர்கள் அனைவரும் வாக்களிப்பதுடன், தங்களது குடும்பத்தினரையும் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்ய வேண்டும்,’’ என்றார்.

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரோஹிதா (19), அங்குள்ள புதுத்தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், தனது முதல் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜனநாயக நாடான இந்தியாவில், வாக்களிக்கும் உரிமை மிகப்பெரிய வரப்பிரசாதம். அந்த உரிமை பெற்றதில் இருந்து, வாக்களிக்க ஆர்வமாக இருந்தேன். தற்போது எனது முதல் ஜனநாயக கடமையை நிறைவு செய்ததில், பெருமை அடைகிறேன். மக்களுக்கான உரிமைகளையும், வாழ்வாதார நம்பிக்கையையும் மனதில் கொண்டு, வாக்களித்துள்ளேன். இளைஞர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக தவறாமல் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார்.

சேலம் கோகுல்நாதா பள்ளியில், முதல் முறையாக வாக்களித்த பி.டெக் மாணவி ஜெனிஷா கூறுகையில், ‘‘மிகவும் ஆவலுடன் வந்து, எனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அளவில் மாற்றத்தை கொண்டு வர, ஜனநாயக கடமையாற்றியது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார். சேலம் மணக்காடு மாநகராட்சி துவக்க பள்ளியில் முதன்முறையாக வாக்களித்த பிசிஏ மாணவி தேவி கூறுகையில், `எனது ஜனநாயக கடமையை முதன்முறையாக இந்த நாட்டுக்காக ஆற்றியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை போல ஒவ்வொருவரும், தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்ற வேண்டும்,’ என்றார்.

இடைப்பாடி விஸ்டம் பள்ளியில் வாக்களித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி சிவசங்கரி கூறுகையில், ‘‘நீண்ட வரிசையில் நின்று மை வைத்து, பொறுப்புடன் முதல்முறையாக வாக்களித்தது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது. உண்மையில் இந்த நாளை மறக்கமுடியாது. என்னைப்போல் முதல்முறையாக வாக்களித்த தோழிகள் அனைவரும் பெருமிதத்துடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டோம்,’’ என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Parliamentary Constituency ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...