ஜெயங்கொண்டம் ஏப். 20: ஜெயங்கொண்டம் அருகேதத்தனூர் கீழவெளியில் கடந்த முறை வாக்களித்த 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்காததால் வாக்குச் சாவடி மையம் முன்பு பொதுமக்கள் திரண்டடு மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது.
இதையடுத்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த முறை வாக்களித்த 40 க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு, இந்த முறை வாக்குச்சீட்டில் பெயர் இல்லை எனக் கூறி தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் கடைசி வரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதில் ஏமாற்றத்துடன் திரும்பிய வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து வாக்குச்சாவடி மையம் முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும், இந்த மையத்தில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க அனுமதிக்காததால் மையம் முன் திரண்ட மக்கள் appeared first on Dinakaran.