சிதம்பரம், ஏப். 20: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிதம்பரம் நகரில் உள்ள மானா சந்து வாக்குச் சாவடியில் தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்தார். இதையடுத்து வெளியே வந்த பாலகிருஷ்ணன் கூறுகையில், இன்று(நேற்று) முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த 2019 தேர்தலை விட தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் திருமாவளவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்காளர்கள், பொதுமக்கள் தெளிவாக இருக்கின்றனர். வட இந்தியாவில் பல கட்ட தேர்தல்கள் நடைபெறுகிறது. கடந்த 2019ல் மோடி பெற்ற வெற்றியை இப்போது பெற முடியாது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி ஏராளமான அரசியல் மற்றும் மக்கள் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்திருக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பது, மதச்சார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது. வேலையில்லா திண்டாட்டம் போன்ற அடிப்படையான பிரச்னைகளை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரை நடந்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.
The post 2019ல் பெற்ற வெற்றியை மோடி இப்போது பெற முடியாது appeared first on Dinakaran.