மூணாறு, ஏப்.20: கேரளா மாநிலம் மூணாறில் 90 கி.மீ., தூரம் ஓடிய கேரள அரசு பஸ்க்கு ரூ.18 மட்டுமே வருவாய் கிடைத்த சம்பவம் தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு தினமும் காலை 10:30 மணிக்கு இயக்கப்படும் கேரள அரசு பஸ் இரவு 7:00 மணிக்கு மூணாறுக்கு வந்து சேரும். பின்னர் அதே பஸ் இரவு 8:00 மணிக்கு மீண்டும் உடுமலைபேட்டைக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி விஷு பண்டிகை தினமான சித்திரை முதல் நாள் என்பதால் கேரளா, தமிழக எல்லையான சின்னாரில் வனத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தது. அதனால் சின்னாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இரவு 7:00 மணிக்கு வர வேண்டிய பஸ் சற்று தாமதமாக இரவு 10:00 மணிக்கு வந்தது.
அது குறித்து காரணம் கேட்ட பணியில் இருந்த அதிகாரி பஸ் ஊழியர்களின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டதாக கூறி பஸ்சை உடுமலைபேட்டைக்கு இயக்குமாறு கூறினார். அந்த நேரத்தில் பயணிகள் இருக்கமாட்டார்கள் எனவும் பஸ்சை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் எனவும் ஊழியர்கள் கூறினர். அதனை பொருட்படுத்தாமல் பஸ்சை கட்டாயம் இயக்குமாறு அதிகாரிகள் கூறியதால் வேறு வழி இன்றி இரவு 10:45 மணிக்கு உடுமலைபேட்டை பஸ்சை இயக்கினர்.
மூணாறில் இருந்து உடுமலைபேட்டை வரை 90 கி.மீ., ஓடிய பஸ்க்கு ரூ.18 மட்டும் வருவாய் கிடைத்தது. இச்சம்பவம் மூணாறு அரசு பஸ் டிப்போவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணை குழுவினர் பஸ் ஊழியர்களிடம் தகவல்களை சேகரித்து சென்றுள்ளனர். விசாரணை முடிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பஸ் டிப்போவில் விஜிலென்ஸ் விசாரணை appeared first on Dinakaran.