மேட்டூர்: கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யா ராணி, நேற்று காலை சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள குள்ளமுடையானூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். தனது ஆதரவாளர்கள் சிலருடன் காரில் வந்த அவர், வாக்கு சாவடிக்கு மிக அருகில் கார்களை நிறுத்தி, அதில் இருந்து இறங்கிச்சென்றார்.
அப்போது அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த பாமக பிரமுகர் கோவிந்தன், வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தார். ஆனால், வேட்பாளர் வித்யா ராணி மற்றும் அவரது ஆதரவாளர்கள், வாக்கு சாவடி மையத்தின் உள்ளே நுழைந்தனர். இதற்கு கோவிந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும்படி கூறினார். இதனால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறுக்கு இடையே வாக்களித்த வித்யா ராணி, வாக்குச்சாவடிக்கு வெளியே வந்தார். அங்கும் பாமகவினருக்கும், வித்யா ராணி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். வாக்கு சாவடிக்கு வெளியிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வித்யா ராணி தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதுகுறித்து வித்யா ராணி கூறுகையில், ‘ஜனநாயக கடமையை ஆற்ற வந்த போது, ஏற்பட்ட இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. வேண்டுமென்றே அந்த நபர் என்னிடம் தகராறு செய்துள்ளார்,’ என்றார்.
The post வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம் appeared first on Dinakaran.