மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நூற்றாண்டு கால வரலாற்று சிறப்புமிக்க வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் முறையான பராமரிப்பின்றி, தற்போது பாசி படர்ந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மருத்துவ குணமிக்க இக்குளத்தை உடனடியாக தூர்வாரி, முறையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ரயில் நிலையம் அருகே நூற்றாண்டு கால வரலாற்று சிறப்புமிக்க வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் எனக் கூறப்படுகறிது. மேலும், இக்கோயில் தேவார வைப்பு ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. இக்கோயிலை தனது திருப்புகழ் பாடல்களில் அருணகிரிநாதர் போற்றி பாடியுள்ளார். இது, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
மூலவர் வெண்காட்டீஸ்வரர், தாயார் மீனாட்சியம்மன் சன்னதிகளுடன் இக்கோயில் சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயிலின் எதிரே மிகப்பெரிய திருக்குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடினால், நம்மிடம் உள்ள தோல்நோய் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக திகழ்கிறது. இதற்குமுன், பாண்டிய மன்னனுக்கு தோல்நோய் ஏற்பட்டதன் காரணமாக, இக்கோயில் குளத்தில் நீராடியதன் மூலமாக குணமடைந்தார் என்று வரலாற்று புராணங்கள் கூறுகின்றன. இதனால், இக்கோயில் தோல் நோய்களுக்கான பிரார்த்தனை கோயிலாகவும் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில் குளம் கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, தற்போது பாசி மற்றும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து, குளத்தின் நீரில் மாசு படிந்து, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இக்குளத்தில் கழிவுநீர் திறந்துவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வையில், உபயதாரர்களின் நிதியுதவியுடன் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோயில் சீரமைப்பு மற்றும் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்திருப்பணிகளின்போது கோயிலின் ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் விமானங்கள், மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி, உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில், இக்கோயில் திருக்குளத்தை முறையாக தூர்வாரி, ஆழப்படுத்தி, படிக்கட்டு, சுற்றுச்சுவர்களுடன் சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post மதுராந்தகத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் கோயில் குளம்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.