×

காஞ்சியில் விறுவிறு வாக்குப்பதிவு: கலெக்டர், திமுக வேட்பாளர், எம்எல்ஏ ஓட்டு போட்டனர்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1932 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 372 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்பி சண்முகம் தலைமையில் 9 ஏடிஎஸ்பிகள், 22 இன்ஸ்பெக்டர்கள், 170 சப்-இன்ஸ்பெக்டர்கள், 670 காவல்துறை மற்றும் 400 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், 350 ஓய்வுபெற்ற போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் என 6800 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 17,48,866. இதில் 8,53,456 ஆண் வாக்காளர்களும், 8,95,107 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர் என 303 பேரும் உள்ளனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்ஃபன்ட் ஜீசஸ் மேல்நிலை பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வம், தனது மனைவி லட்சுமிகாவுடன் வந்து வாக்கு செலுத்தினார். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் நாராயணர் குரு பள்ளி வளாகத்தில் வாக்கை செலுத்தினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஜனநாயக கடமையாற்றினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12.25 சதவீத வாக்குப்பதிவானது.

The post காஞ்சியில் விறுவிறு வாக்குப்பதிவு: கலெக்டர், திமுக வேட்பாளர், எம்எல்ஏ ஓட்டு போட்டனர் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,DMK ,MLA ,Kanchipuram ,SP ,Shanmugam ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி