×

ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை

புவனேஸ்வரம்: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 10வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் களம் கண்ட 12 அணிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மோகன் பகான் எஸ்ஜி, மும்பை சிட்டி எப்சி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. கூடவே லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததற்காக மோகன் பகான் ‘லீக் சுற்றுக்கான கேடயத்தையும், 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும்’ வென்றது. மேலும் 3 முதல் 6 வரையிலான இடங்களை பிடித்த எப்சி கோவா, ஒடிஷா எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, சென்னையின் எப்சி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று நடைபெறும் நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் 4வது இடம் பிடித்த ஒடிஷாவும், 5வது இடம் பிடித்த கேரளாவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரமில் நடக்கிறது. அதே போல் கோவாவில் நாளை நடைபெறும் 2வது நாக் அவுட் சுற்றில் 3வது இடம் பிடித்த கோவாவும், 6வது இடம் பிடித்த சென்னையும் களம் காணுகின்றன.

இந்த 2 சுற்றில் வெற்றிப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் ஏப்.23, 24 தேதிகளிலும், 2வது சுற்று ஆட்டங்கள் ஏப்.28, 29தேதிகளில் நடக்கும். இறுதி ஆட்டம் மே 5ம் தேதி நடத்தப்படும். இன்று நடைபெறும் ஆட்டத்தில் சொந்த மண்ணில் களம் காணுவது ஒடிஷாவுக்கு கூடுதல் பலமாக இருக்கும். நடப்புத் தொடரிலும் சொந்த களத்தில் நடந்த ஆட்டத்தில் ஒடிஷாவே வென்றது.

நேருக்கு நேர்
* ஐஎஸ்எல், துரந்த் கோப்பைகளில் ஒடிஷா, கேரளா அணிகள் இதுவரை 23முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கேரளா 8, ஒடிஷா 8 ஆட்டங்களில் வென்று இருக்கின்றன. எஞ்சிய 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

* நடப்புத் தொடரில் 2 தலா 2-1 என்ற கோல் தலா ஒரு வெற்றியை பெற்று சமபலத்தில் இருக்கின்றன.

* நடப்புத் தொடரில் இரு அணிகளும் முறையே 35, 32 கோல்கள் அடித்துள்ளன. மேலும் முறையே 23, 31 கோல்கள் வாங்கியுள்ளன. ஆக இரு அணிகளிடம் கோல் வித்தியாசம் முறையே 12, 1ஆக உள்ளன.

The post ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : ISL Football ,Kerala ,Bhubaneswar ,Mohan Baghan ,SG ,Mumbai City FC ,ISL ,Dinakaran ,
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...