×
Saravana Stores

புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: பிட்காயின் தொடர்பான பண மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக மும்பை, புனேவில் உள்ள ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வேரியபிள் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பிட்காயின் மூலமாக முதலீட்டாளர்கள் பலரை ஏமாற்றி ரூ.6,600 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை கையிலெடுத்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ரூ.150 கோடி மதிப்பிலான பிட்காயின்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

உக்ரைனில் பிட்காயின் மைனிங் அமைப்பதற்காக ராஜ் குந்த்ரா, அமித் பரத்வாஜிடம் இருந்து 285 பிட்காயின்களை வாங்கியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த அமலாக்கத்துறை, இருவரிடமும் விசாரித்து வந்தது.

இந்நிலையில், பண மோசடி வழக்கின் ஒரு பகுதியாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. மும்பையில் ஜூகுவில் ஷில்பா ஷெட்டி பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, புனேவில் உள்ள பங்களா மற்றும் ராஜ் குந்த்ராவின் பெயரில் உள்ள பங்குகள் உள்ளிட்டவற்றை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 

The post புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Shilpa Shetty ,Pune ,NEW DELHI ,The Enforcement Directorate ,Mumbai ,Variable Tech Pvt Ltd ,Dinakaran ,
× RELATED அயோத்தி தீர்ப்புக்காக கடவுள் முன்...