* ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்ற கோரியவருக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை: அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய கோரியவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அவரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இந்த விவகாரம் தொடர்பான டிஜிபியின் அறிக்கையை சமர்ப்பித்து வாதிடும்போது, மனுதாரரின் குற்றச்சாட்டுகளை டிஜிபி மறுத்துள்ளார்.
தேர்தல் ஆணைய கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி உள்ளதால் மனுதாரர் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் நடைமுறைகள் நாளையுடன் (இன்று) முடிவுக்கு வருகின்றன. ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் நடைமுறை தொடங்கி விட்டது. மனுதாரருக்கு அதிகாரி மீது தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களுக்காக நீதிமன்றத்தை அணுகுவதை ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது appeared first on Dinakaran.