ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனே கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருவர். கடந்த காலங்களில் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தடைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தடைக்காலம் துவங்கிய முதல் வாரத்திலேயே நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் நேற்று மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தடைக்காலம் துவங்கிய சில நாட்களிலேயே நிவாரண நிதி கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.8 ஆயிரமாக நிவாரண நிதியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
The post மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.